
இந்தியாவின் தொல் வரலாறு குறித்து ஆய்வு செய்து, தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் டோனி ஜோசஃப், தனது ‘ஆதி இந்தியர்கள்’ நூலில், “ஹரப்பர்களின் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம் மிக நவீனமாக இருந்தது; பண்டைய உலகில் அது போன்ற ஒன்று வேறு எங்கும் இருந்ததில்லை; அவர்கள் நீரோடைகளின் குறுக்கே அணைக் கட்டுதல் உட்படப் பல வழிகளில் நீரைச் சேமிக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார். ஹரப்பர் நாகரிகம் திராவிடர்களுடையதாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் இன்று நிறுவி உள்ளன. அதன் அடிப்படையில் தமிழர்களே அணைக்கட்டுவதில் உலகிற்கு முன்னோடியாக இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
“முந்நீர் விழவு” என்ற பெயரில் நீருக்கு விழா எடுத்த தமிழரின் பண்பாட்டை ‘நீர் பண்பாடு’ என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் அவர்கள் குறிப்பிடுகிறார். அதன் சான்றுகளாக பாண்டிய மன்னர்களான கூன்பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி இருக்கிறார்கள். 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளே இதற்குச் சாட்சியாகும். கி.பி. 650 முதல் 700 வரையிலான காலக்கட்டத்தில் மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எனும் அரிகேசரி, இன்றைய குருவிக்காரன் சாலை அருகே, வைகை ஆற்றில் அணைக் கட்டி, தண்ணீரைக் கால்வாய் வெட்டி பாசனத்திற்குக் கொண்டு சென்றுள்ளான் என்றும் அந்தக் கால்வாய் கொந்தகை, கீழடி, திருசுழி வழியாக வீரசோழன் வரையில் இருந்திருக்கிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் சொ. சாந்தலிங்கம் குறிப்பிடுகிறார்.
தமிழர் கட்டிய அணைகளிலேயே “கல்லணை” சர்வதேச அளவில் தமிழரின் திறனைப் பறை சாற்றுவதாக இருக்கிறது. உலகில் புழக்கத்தில் உள்ள அணைகளிலேயே கல்லணைதான் மிகப் பழமையானதாகும். கிமு இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலச்சோழனால் கட்டப்பட்டதே கல்லணை. கரிகாலன் கல்லணையைக் கட்டி, காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்தி, வயல்களில் நீர்ப் பாய்ச்சியதைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படைப் பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. சாதாரணமான பாசனக் காலங்களில் தண்ணீர் காவேரி ஆற்றில் செல்வது போலவும் வெள்ளம் ஏற்பட்டால் கொள்ளிடம் ஆற்றில் செல்வது போலவும் அணை அமைக்கப்பட்டது கரிகாலனின் தேர்ந்தத் திட்டமிடலாகும். இந்த அணையால், இன்றளவிலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன.
மிகவும் அகலமான காவிரி ஆற்றின் குறுக்கே, களிமண்ணை மட்டும் கொண்டு எப்படி இது கட்டப்பட்டது என்பதில் தான் ஆச்சர்யம் அடங்கி உள்ளது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே. பெரிய பெரிய கற்களைச் சுண்ணாம்பு சாந்து போன்ற ஒருவிதமானப் பசைக் கொண்டு ஒட்டிக் கட்டினாலும், ஓடும் நீரில் கட்டுவது சுலபமல்ல. இதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கியதுதான் தமிழனின் மேலோங்கிய அறிவியலாகும். நீர் அரிப்பின் அடிப்படை அறிவியலை மட்டும் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி உள்ளனர் என்பதே இந்த அணையின் புகழுக்கானக் காரணமாகும்.
முதலில் மணற்பாங்கான காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகள் போடப்பட்டன. அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றதும், அதன் மேல் வேறொரு பாறையை வைத்து, நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண் பூசப்பட்டது. இப்படியாக எழும்பியதுதான் கல்லணை. இந்தத் தொழில்நுட்பத்தை உலகிற்குச் சொன்னவர் ‘இந்திய நீர் பாசனத்தின் தந்தை’ என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் ஆவார். அவர் கல்லணையைப் பல ஆண்டுகாலம் ஆராய்ந்து தமிழனின் கட்டிடக்கலையை உலகிற்கு எடுத்துச் சொன்னார்.
இது குறித்து ‘நீர் எழுத்து’ என்ற நூலில்,”ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை இவர்களிடமிருந்து (கல்லணை கட்டியவர்களிடம்) தான் நாம் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனைப் புரிந்த, பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம்.” என்று கல்லணைக் குறித்து ஆர்தர் காட்டன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, நீரைக் கொண்டாடும் தமிழரால் எழுப்பப்பட்ட கல்லணை என்றென்றும் நிலைத்து நின்று, தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும்.