
கடை ஏழு வள்ளல்களில் காரியும் ஒருவன். திருக்கோவிலூருக்கு மேற்கே தென்பெண்ணை ஆற்றங்கரையின் தென்பகுதி ' மலாடு' என்று அழைக்கப்பட்டது. இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக மலாடு இருந்திருக்கிறது. இந்த மலாடினை திருக்கோவிலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் வள்ளல் காரி. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காரியின் குதிரை கரிய நிறத்தைக் கொண்டதாக இருந்தது. அதனால் அதற்கும் காரி என்ற பெயர் உண்டு. காரியை தன்னகத்தே கொண்டவன் ஆதலால் இவனும் காரி எனப்பட்டான். காரியின் குதிரை, போர்க்களத்திலே தனது தலைவனின் எண்ணத்திற்கேற்ப செயல்படும் திறன் கொண்டது. காரியிடம் தோள்கள் தினவெடுத்த பல்லாயிரக்கணக்கான பலம் பொருந்திய வீரர்களைக் கொண்ட பெரும் படை இருந்தது.
தமிழ் நாட்டில் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்கள் மூவேந்தர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி அவர்கள் போரிடும்போது, அனைவரும் காரியை துணைக்கழைத்துக் கொள்வர். காரி எந்த வேந்தனுக்கு ஆதரவோ அவனே வெற்றி பெறுவான். அவனது வெற்றி உறுதியானது. வெற்றி பெற்றவர்கள், " காரியை துணைக்கழைத்த காரணத்தால் நான் வெற்றி பெற்றேன்" என்று மனதார ஒப்புக் கொண்டார்கள். அதேபோல தோற்றவர்கள், " எதிராளிக்குத் துணையாக காரி இருந்தான். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்" என்று சொன்னார்கள். ஆக, போரில் ஒரு வேந்தனின் வெற்றியை நிர்ணயிப்பவனாக காரி இருந்தான். வெற்றி பெற்றவர்கள், காரிக்கு எண்ணற்ற பரிசில்களை வழங்கினார்கள். அதில் ஊர்களும் அடங்கும். அனைத்துப் பரிசில்களோடு, நாடு திரும்பும் காரியின் புகழ் பாட, புலவர்களும் பரணர்களும் காத்திருப்பார்கள். வாயாற, மனதாற காரியின் புகழைப் பாடுவார்கள். பாடிய அனைவருக்கும், தான் பெற்று வந்த பரிசில்களை வாரி வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் காரி.
அதனால், அவன் புகழ், பொத்தி வைத்த மல்லிகை போல் தமிழ் உலகு முழுவதும் பரவியது. இவன் புகழ் கேள்விப்பட்ட புலவர் கபிலர், எப்படி பாரியை காண விரும்பினாரோ அதேபோல் காரியையும் கண்டு நலம் விசாரிக்க விரும்பி திருக்கோவிலூர் வருகிறார். வந்தவர், அவனது வள்ளல் தன்மையை பாடி பரவசமாகாமல், முதலில் குற்றப் பத்திரிகை வாசிக்கிறார். பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும் என்ற கபிலர், காரியின் வள்ளல் தன்மை பாராட்டுதற்குரிதென்றாலும், திறன் இல்லா புலவர்களுக்கு பரிசளிப்பது ஏற்புடையதல்ல. அவர்களின் திறன் கண்டு, வரிசைப்படுத்திய பின்னரே தாம் பரிசளிக்க வேண்டும். என்பதை,
"மாவண் தோன்றலே, நீ வரையாது வழங்கும் வள்ளன்மையைக் குறித்து எனக்கு மகிழ்வே. என்றாலும், இரவலர்க்கும், என் போன்ற புலவர்களாகிய பரிசில்மாக்களுக்கும் சிறிது பாடு தோன்ற நீ பரிசில் ஈதல் உன் பண்பாடாகும்," என்று அறிவுறுத்துவார் போல “பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” என்று பாடியுள்ளார்.
புலவர் கபிலர், வள்ளல் காரியின் வள்ளல் தன்மையை இப்படி பாடுகிறார்,
‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்’
” உனது நாட்டினை கடல் கொள்ளாது. பகைவராலும் கைக்கொள்ள முடியாது. ஆனாலும், அது அந்தணற்கான கொடைப் பொருளாயிற்று. மூவேந்தர்களுக்கு நீ போரில் உதவி, அதனால் கிடைத்த விழுப்புண்களோடு, கொண்டு வந்த பரிசில்கள் அத்தனையையும், தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், பாடிய புலவர்களுக்கு அளிக்கிறாயே. உனக்கு, உமது கற்புடை மனையாளின் தோள் மட்டுமே போதும் என்று நினைத்து விட்டாயோ” என்று பாடுகிறார்.
தன்னிடம் கொடை கேட்டு வருபவர்களின், மனதை மயிலிறகு வருடுவது போல், இனிய சொற்களை பேசுபவன் காரி. அதோடு, தலையாட்டம் என்ற அணிகலனை தலையிலும், கழுத்தில் மணியையும் அணிந்த குதிரைகளை வருபவர்களுக்கு பரிசளிப்பான் காரி. இப்படி காரி குதிரைகளை பரிசளித்தது குறித்து இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்,
.................... ……......... ………......... கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகைந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரி............ என்று பாடியுள்ளார்.
அதாவது, மணியையும் தலையாட்டத்தினையும் ( தலையாட்டம் என்பது குதிரைக்கான ஓர் அணி) உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடையவன் காரி என்னும் வள்ளல் என்பதே இதன் பொருள்.
இப்படி கொடையளித்து சிவந்த அவனது கரங்கள் பற்றி, புலவர் கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், பெருஞ்சித்திரனார்போன்றோர் பாடி உள்ளனர்.
ஒருமுறை சோழ பரம்பரையில் வந்த பெருநற்கிள்ளி என்ற சிற்றரசன் உறையூரை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்தில், தொண்டியை ஆண்டு வந்த சேரர் பரம்பரையில் தோன்றிய யானைக்கண் சேய் என்னும் சிற்றரசனுக்கு உறையூர் மீது ஒரு கண். ஆகவே உறையூரைக் கைப்பற்ற முடிவு செய்து, பெருநற்கிள்ளியைப் பகைத்துக்கொண்டு உறையூரின் மீது படை எடுத்துச் சென்றான். கிள்ளியோடு போரிட்டு பலத்த சேதம் ஏற்படுத்தினான். முடிவில் கிள்ளிக்கு தோல்வியும் இறப்பும் ஏற்பட்டு விடும் என்கிற சூழலில் காரிக்கு செய்தி எட்டியது. காரி, கிள்ளியின் பழைய நண்பன். நண்பனுக்கு உதவும்பொருட்டு பெருஞ்சேனையுடன் உறையூரை அடைந்தான். யானைக்கண் சேயின் படைகளை துரத்தியடித்து சோழ நாட்டை கிள்ளிக்கு பெற்றுத் தந்தான். இப்படி காரி செய்த உதவிகளை, மூவேந்தர்கள் தனித்தனியாக புகழ்ந்து பேசிய வண்ணம் இருந்தனர்.
ஒருமுறை இந்த மூவரும் ஒற்றுமையாக ஒன்று கூடிய சமயத்தில் வள்ளல் காரி பற்றி பேசிய வண்ணம் இருந்தனர். அப்போது, மூவரும் ஒன்று சேர்ந்து காரியை கவுரவிக்க முடிவு செய்தனர். அந்த காலத்தில் முடி அணியும் உரிமை சேர சோழ பாண்டியர்களுக்கே இருந்தது. சில பெரும் புலவர்கள் முடியணியும் சிறப்புடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறே மலையமானுக்கும் முடி சூட்டி, அதையணியும் உரிமையை வழங்கலாம் என்று தீர்மானித்தார்கள். ஒரு பெரு விழா நடத்தி அவனுக்கு முடி அணிந்தார்கள். அதுவரை மலையமான் காரி என்ற பெயரில் அழைக்கப்பட்டவன் அதன் பின் மலையமான் திருமுடிக் காரி என்று அழைக்கப்பட்டான்.
இந்த காரியே, ஓரியை போரில் கொன்றவன். ஓரியைக் கொன்ற காரியை பழி தீர்க்க, ஓரியின் நண்பன் அதிகமான் நெடுமான் அஞ்சி காரியின் மீது படையெடுத்தான். அப்போது காரியின் படைகள் ஒரு போர் முடிந்து, ஓய்வில் இருந்தது. இதன் காரணமாக அதிகமானின் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது. உடன் காரி சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம் உதவி கேட்க, சேரன் அதிகமானைக் கொன்று, மலாட்டை மீட்டு காரியிடம் கொடுத்தான்.
மலையமான் திருமுடிக்காரியை புலவர் பெருஞ் சித்திரனார், ” காரி பிறர்க்கு ஈந்து மிகுந்ததை தான் உண்ணும் கடப்பாடுடையன், தனக்கு மிஞ்சியதே தானம் என்று இல்லாது , பிறர்க்கு கொடுத்து மகிழ்ந்தவன்” என்றும் புகழ்ந்து பாடியுள்ளார்.
தம்மை மிடிபிடித்து உந்த, சில சொற்களைக் கொண்டேனும் பாடிப் பரிசில் பெற்றுச் செல்லலாம் என்று வந்ததாகக் கூறிப் பரிசு கேட்கிறார்கள். அவர்களைக் கண்டா காரியோ, அந்தோ ! புலவரின் வறுமை தான் என்னே ! அவர் சில சொல்லி என்? பல சொல்லி என்? காரி தன்னைப் புகழ்ந்த காலத்துத்தான் ஈய வல்லனோ? அல்லன், அல்லன்,இவன் தன்னைக் கண்டவர்க்கெல்லாம் களிப்புடன் ஈயும் கடப்பாடுடையவன்” என்று கூறுகிறான். காரியின் இந்த வள்ளல் குணத்தினை இப்புலவர், “இவன் பகைவரை வென்று, அவர்களின் யானைகளைக் கைப்பற்றி முக படாத்தில் அமைந்த பொன்னைப் பாணர்களுக்கு ஈந்து மகிழ்பவன்,” என்றும் பாடுகிறார்.
காரியின் வீரத்தின் மாண்பினை புலவர் கபிலர்
............... .............. ............. பழவிறல்
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்
பழைமை சிறப்புடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான், ஓரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே புகுந்ததைக் கண்ட காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சல் இட்டாற் போல..
என்று பாடியுள்ளார்.
மலாட்டை ஆண்ட, மலையமான் திருமுடிக்காரி சிறந்த மன்னனாகவும் உயர்ந்த வீரனாகவும் மாபெரு வள்ளலாகவும் விளங்கிய, அவனை கபிலர் தொடங்கி பல புலவர் பெருமக்கள் பாடி, பரிசில் பெற்று மகிழ்ந்துள்ளனர்.