Traditional

நீத்தார் வழிபாடு

நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு தொன்மையானப் பண்பாட்டு முறையாகும். பண்டைத் தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் இந்த மூத்தோர் வழிபாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

Karkidaka,Vavu,Bali,Is,A,Ritual,Performed,By,Hindus,To
நீத்தார் வழிபாடு know more

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற்கல்

என்ற பாடல் வரிகள் அதற்குச் சான்றாகும். மேலும், போற்றுதலுக்குரிய செயல்கள் செய்து மரணம் அடைந்தோரைத் தெய்வமாக வழிபடும் மரபைப் பற்றி "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே” என்று மாங்குடி மருதனார் கூறுகிறார். நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டி, உடுக்கை அடித்துப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் மலைபடுகடாம் ஆகிய நூல்களில் காணலாம். மேலும், மயிற்பீலிகளைக் கொண்டு அலங்காரம் செய்யும் வழக்கம் இருந்ததைப் பின்வரும் பாடல் வரிகள் கூறுகின்றன.

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணி மயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்
இதே கருத்தை அகநானூற்றில் வரும்
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் படும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்

என்ற பாடலும் பதிவு செய்கிறது. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி வைப்பது “பதுக்கை” என்று அறியப்பட்டது. நடுகற்கள் அமைந்த இடத்தைச் சுற்றி வேலை நட்டுக் கேடயங்களையும் நிறுத்தி வைத்தனர் என்ற செய்தியை, “கிடுகு நிரைத்து எஃகூன்றி நடுகல்லின் அரண்போல” என்ற பட்டினப்பாலை வரிகள் கூறுகின்றன. இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர் வைத்து, தோப்பி என்னும் கள் வைத்துப் படைக்கும் வழக்கமும் உயிரினங்களைப் பலியிடும் வழக்கமும் சங்க காலத்தில் இருந்ததை

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
என்ற பாடல் வரிகளும்
நடுகற் பீலிசூட்டித் துடிப்படுத்தத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பிலி கொடுக்கும்

என்ற பாடலடிகளும் குறிப்பிடுகின்றன. ‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார். மேலும், நடுகற்களுக்கு நாள்தோறும் வழிபடும் காரியங்களைப் பெண்களே செய்து வந்தனர் என்பதை கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் பூசை செய்ய கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவள் நியமிக்கப்பட்ட சிலப்பதிகாரக் கதைப்பகுதி கூறுகிறது.

பண்டைய உலகில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் இறந்தோரை வழிபடும் இத்தகைய நம்பிக்கையும் வழிபாட்டு முறையும் இருந்துள்ளது. உதாரணமாக, எலிஸியம் என்பது இறந்த வீரர் புகும் சுவர்க்கம் எனவும் அது இவ்வுலகிலேயே உள்ளதென்றும் பண்டைய கிரேக்கர்கள் நம்பினர். அது போலவே பண்டைய ஜெர்மானியம், ரோமானியர், எகிப்தியர், சீனர் ஆகியோரும் சுவர்க்கம் என்ற கருத்தில் நம்பிக்கை உடையவர்களாகவும் இறந்தவரை வழிபடும் முறை உடையவர்களாகவும் இருந்தனர் என்கிறார் நா. வானமாமலை. மேலும், இந்த நடுகற்கள் பழந்தமிழ் மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறையையும் வெளிப்படுத்தும் ஆவணங்களாக மட்டுமல்லாது வரலாற்றில் நிகழ்ந்த போர்களைப் பற்றியச் செய்திகளையும் கூறுகின்றன. நடுகல்லில் இறந்த வீரர்களை பற்றியச் செய்திகள் செதுக்கப்பட்டிருப்பது சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.

தொடக்க காலத்தில் நடுகற்களில் எழுத்தோ, உருவமோ இல்லை என்பது தொல்காப்பியர் நடுகல் பற்றிய ஆறு நிலைகளில் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததை வைத்து அறியலாம். அதோடு, இதுவரையில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட நடுகற்கள் பலவற்றிலும் வட்டெழுத்துக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடுகற்கள் அதிக அளவில் நடப்பட்டிருக்கலாம் என்பதும், நடுகற்கள் வழிபாடு பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்கள் தோன்ற காரணமாயிற்று என்பதும் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. நடுகற்களில் உள்ள வட்டெழுத்துக்கள் மூலமாக வரலாற்றின் பல போர்கள் நடைபெற்ற இடம், ஆண்டு, போரில் பங்கேற்ற மன்னர்கள் போன்ற தகவல்களும், இறந்த வீரரின் குடும்பத்திற்கு மன்னன் நிலக்கொடை அளிக்கும் மரபும் தெரிய வருகிறது.

இவ்வாறு, கடவுள் கோட்பாடுகள் உருவாவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கொண்டு தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என மேற்கூறியத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. இந்த நடுகல் வழிபாட்டு முறையே பிற்காலத்தில் கிராமியத் தெய்வமரபாகவும் குலதெய்வ வழிபாட்டு முறையாகவும் மாற்றமுற்றது. தொன்மையான இந்த முறை இன்று வரையிலும் தமிழர்களால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது என்பது உலகத்தோரால் மிகவும் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இன்றும் தமிழகத்தின் பல சாலையோரங்களிலும் கிராமங்களிலும் காணப்படும் நடுகற்கள் பல ஆயிரம் ஆண்டுக்குள்ள வரலாற்றுப் பெட்டகங்கள் என்பது பெருவியப்பை ஏற்படுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Coming Soon . . .
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Description
  • Weight
  • Dimensions
  • Additional information
  • Add to cart
Click outside to hide the comparison bar
Compare